மதுரையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம், திருப்பூர், கோவையில் நேற்று ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக மதுரையில் இன்று ஆய்வு செய்கிறார்.
இதற்காக நேற்று இரவு கோவையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். கொரோனா தடுப்பு பணிக்கு வருவதால் தொண்டர்கள் தன்னை வரவேற்க வரவேண்டாம் என்று ஏற்கனவே ஸ்டாலின் கேட்டுக்கொண்டு இருந்தார். இருந்தாலும் ஆர்வ மிகுதியால் விமான நிலையத்திற்கு ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை.
அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் ஆகியோர் விமான நிலையத்தில் முதல்-அமைச்சரை வரவேற்றனர். அதன்பின் ஸ்டாலின், காரில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை அமைச்சர்கள், கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் முதல்-அமைச்சர் நேற்று இரவு அங்கு தங்கினார்.
இன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மதுரை மாவட்டத்துக்கான கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகிறார்.
இந்த கூட்டத்திற்கு பின் முதல்-அமைச்சர் தோப்பூர் செல்கிறார். அங்கு அவர், 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். அதன்பின் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருச்சி புறப்பட்டு செல்கிறார்.
Post a Comment