சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து), பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), செல்சியா (இங்கிலாந்து) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. அரைஇறுதிப்போட்டி 2 ஆட்டங்கள் கொண்டதாகும்.
இதில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி-பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிக நேரம் (56 சதவீதம்) பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியினரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், மான்செஸ்டர் சிட்டி அணியினர் எதிரணியின் கோல் எல்லையை அடிக்கடி முற்றுகையிட்டு கோல் அடிக்க தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். இதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.
11-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் ரியாத் மாக்ரெஸ் இந்த கோலை அடித்தார். இதனால் முதல் பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
2-வது பாதி ஆட்டத்திலும் மான்செஸ்டர் சிட்டி அணி தொடர்ந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கடும் நெருக்கடி அளித்தது. 63-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி மீண்டும் கோல் அடித்தது. முதல் கோலை அடித்த ரியாத் மாக்ரெஸ் இந்த கோலையும் அடித்து அசத்தினார்.
69-வது நிமிடத்தில் எதிரணி வீரர் பெர்னான்டின்ஹோவை வேண்டுமென்றே காலில் மிதித்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் வீரர் ஏஞ்சல் டி மரியா நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது.
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி பதில் கோல் திரும்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்த்தியது. அரைஇறுதியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. இதனால் ஒட்டு மொத்தத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த ரியாத் மாக்ரெஸ் அரைஇறுதியின் முதல் சுற்றிலும் ஒரு கோல் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து உலகில் அதிகம் சம்பளம் பெறும் வீரர்களான நெய்மார் (பிரேசில்), கைலியன் எம்பாப்பே (பிரான்ஸ்) ஆகியோர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் அங்கம் வகித்தாலும் அந்த அணி இறுதிப்போட்டியை எட்ட முடியாமல் ஏமாற்றம் அளித்தது. காயம் காரணமாக கைலியன் எம்பாப்பே அரைஇறுதியில் களம் காணவில்லை.
சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இதில் மான்செஸ்டர் சிட்டி அணி, ரியல் மாட்ரிட்-செல்சியா அணிகள் இடையிலான அரைஇறுதிபோட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.
Post a Comment