தனியார் மருத்துவமனை, பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு; அரசாணை வெளியீடு
தமிழக சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் மூலமாக மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகின்றன. தற்போது கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், கொரோனா தொற்று சிகிச்சை கட்டணம் குறித்து தமிழ்நாடு சுகாதாரத்திட்ட இயக்குனரின் உயர்மட்ட சிறப்புக்குழு கூட்டம் 14-ந்தேதியன்று நடைபெற்றது. அதன் பின்னர் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு, கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கருத்துருவை அரசுக்கு சுகாதாரத்திட்ட இயக்குனர் அனுப்பியுள்ளார்.அதன்படி, 2020-ம் ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி நிர்ணயிக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிடப்படுகிறது.
அதன்படி, அரசு மற்றும் அரசினால் பரிந்துரைக்கப்படும் மாதிரிகள், தனியார் ஆய்வுக்கூடங்களில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.800 கட்டணம் ரூ.550 என்றும்; குழு மாதிரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.400 ஆகவும் குறைக்கப்படுகிறது.
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளியாக இல்லாதவர்கள், தனியார் ஆய்வுக் கூடங்களில்ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆகவும், வீட்டுக்குச் சென்று பரிசோதனை செய்வதற்கு கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டும் என்றும் நிர்ணயம் செய்யப்படுகிறது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கான தொகையை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மறுபரிசீலனை செய்த பிறகு ஆணை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment