தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு; மருத்துவ துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கருப்பு பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) குறித்து பொதுமக்களுக்கு தேவையற்ற பீதி இருக்க வேண்டியது இல்லை. இது ஏற்கனவே இருக்கக்கூடிய நோய் தான். கொரோனாவுக்கு பிறகு புதிதாக வரக்கூடிய நோய் என்றும், இது இறப்பை ஏற்படுத்தும் என்பதும் போல சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. கருப்பு பூஞ்சை நோய் தொற்று பல ஆண்டுகளாக இருக்க கூடியது.
கொரோனாவுக்கு பிறகு மட்டும் அல்ல, கொரோனாவுக்கு முன்பே இந்த நோய் இருக்கும். அதீத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்கள், ஐ.சி.யூ.வில் பல நாட்களாக இருப்பவர்களுக்கும், சில தெரபிகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், ராஜஸ்தான், மராட்டியத்தில் கருப்பு பூஞ்சையின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதாக செய்தி வந்தது. இது அறிவிக்கபட்ட நோயாக பொது சுகாதாரத்துறையின் கீழ் அறிவிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் தெரிவித்தார். அந்தவகையில் பொதுசுகாதரத்துறை கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட்ட நோய் என தெரிவித்தது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த நோய் கண்டறியப்பட்டால், பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இது குணப்படுத்தக்கூடிய நோய். ‘சைனஸ்’ பிரச்சினை உள்ளிட்ட அறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இந்த நோய் குறித்த ஆய்வு மேற்கொள்ள 10 பேர் அடங்கிய டாக்டர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.கருப்பு பூஞ்சை நோய் குறித்த தேவையற்ற பீதியோ, பதற்றமோ வேண்டாம்.
இதற்கு தேவையான ‘ஆம்போடெரிசின்’ என்ற மருந்து தமிழக மருத்துவ பணிகள் கழகத்திடம் இருந்த போதிலும், இன்னும் 5 ஆயிரம் குப்பிகளுக்காக ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 நபர்கள் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் சர்க்கரை நோயாளி. 9 பேரில் 7 பேருக்கு கண் பாதிப்பு உள்ளது. இவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். இவர்களுக்கான சிகிச்சை தொடங்கிவிட்டது. இதுவரை எந்த இறப்பும் இல்லை.
கொரோனா நோய் தொற்று பல பகுதிகளில் குறைய தொடங்கியதற்கு காரணம், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததே ஆகும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது என பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம். பல மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரிப்பதற்கான அறிகுறி தெரிகிறது. பல மாவட்டங்களில் அறிகுறி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment