சேமித்து வைத்து இருந்த ரூ.2,506-ஐ கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய 5-ம் வகுப்பு மாணவி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
சேலம் மாவட்டம் வாழப்பாடி முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். தொழிலாளி. இவரது மகள் ஜெசிகா. இவள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
ஜெசிகா 3-ம் வகுப்பு படிக்கும்போது அரசு சார்பில் பெண் கல்விக்காக ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்பட்டது. தற்போது 3 ஆண்டுக்கான ரூ.1,500-ம் மற்றும் தனது சேமிப்பில் வைத்திருந்த ரூ.1006 என மொத்தம் ரூ.2,506-ஐ சேமித்து வைத்திருந்தாள்.இந்நிலையில், பல்வேறு ஊர்களில் சிறுவர்-சிறுமிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்கள்.
இதன்படி மாணவி ஜெசிகாவும், தான் சேமித்து வைத்திருந்த ரூ.2,506-ஐ கொரோனா நிவாரணத்திற்காக வழங்க முன்வந்து நேற்று சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை திறக்க வந்திருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கி வாழ்த்து பெற்றாள்.
அப்போது அந்த மாணவி தங்கள் குடும்பத்திற்கு சொந்த வீடு, நிலம் இல்லாவிட்டாலும் தன்னால் இயன்ற அளவு சேமித்து வைத்திருந்த தொகையை நிவாரண நிதிக்கு வழங்குவதாக தெரிவித்தாள். தமிழக அரசு அறிவித்த நிவாரண நிதிக்காக தனது எதிர்காலத்திற்காக அரசு தந்த தொகையையும், தனது சேமிப்பையும் வழங்கிய அரசு பள்ளி மாணவி ஜெசிகாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
Post a Comment