News Breaking
Live
wb_sunny

Breaking News

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: செல்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: செல்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது

32 முன்னணி கிளப் அணிகள் பங்கேற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இங்கிலாந்தில் உள்ள புல்ஹாம் நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்தது.
அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் செல்சி அணி (இங்கிலாந்து), 13 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட்டை (ஸ்பெயின்) சந்தித்தது.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிக நேரம் (68 சதவீதம்) ரியல் மாட்ரிட் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் செல்சி அணியினரின் கையே பெரும்பாலும் ஓங்கி இருந்தது. 28-வது நிமிடத்தில் செல்சி அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் காய் ஹவெர்ட்ஸ் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது. அதனை சக வீரர் டிமோ வெர்னெர் தலையால் முட்டி கோல் வளையத்துக்குள் திணித்தார்.

பதிலடி கொடுக்க, ரியல் மாட்ரிட் அணி வீரர் கரிம் பென்ஜிமா கோலை நோக்கி அடித்த பந்தை செல்சி அணியின் கோல்கீப்பர் மென்டி அருமையாக தடுத்து நிறுத்தினார். முதல் பாதி ஆட்டத்தில் செல்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

2-வது பாதி ஆட்டத்திலும் செல்சி அணியினரின் சிறப்பான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரியல் மாட்ரிட் வீரர்கள் தடுமாற்றம் கண்டனர். 85-வது நிமிடத்தில் செல்சி அணி 2-வது கோல் அடித்தது. அந்த அணி வீரர் மாசன் மவுன்ட் இந்த கோலை அடித்தார். வலுவான ரியல் மாட்ரிட் அணி கடைசி வரை போராடியும் பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை.

முடிவில் செல்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது. இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்து இருந்தது. இதனால் ஒட்டுமொத்தத்தில் செல்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2012-ம் ஆண்டு சாம்பியனான செல்சி அணி அதன் பிறகு இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைப்பது இதுவே முதல்முறையாகும்.

வெற்றிக்கு பிறகு செல்சி அணியின் பயிற்சியாளர் தாமஸ் துசெல் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த போட்டியில் எங்கள் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது. இது சிறப்பான சாதனையாகும். இந்த வெற்றிக்கு எங்கள் அணி தகுதி படைத்தது’ என்றார்.
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் வருகிற 29-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் சிட்டி-செல்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Tags

Newsletter Signup

"Nagercoil Mail" The Heart Beats of Kumari... Stay tuned with us... Subscribe our site for Latest news...

Post a Comment